Monday 31 August 2009

பாலைவன ரோஜா...

ஒரு தூய நட்புக்காக...

நம் வாழ்விழந்த சோகத்தில்
வாயடைத்து நின்றேன்......
அழியும் நம் இனத்துக்காய்
நடு வீதிக்கு சென்றேன்.....
அந்த தருணங்கள்
என் வாழ்வின் ரணங்களாய்.....
எப்போதும் சுட்டெரிக்கும்
பாலை வனங்களாய்........

அந்தப் பாலைவனத்தினிலே
சோககீதம் பாடும்
ஓர் சோலைக் குயிலாக.....
திசையேதும் தெரியாமல்
திசைமாறிப் பறக்கின்றேன்....

அந்த நெருப்பு மண்தரையில்
பட்டுவண்ண ரோஜாவொன்று.....
நட்பெனும் நிழல் தேடி
நான் பறக்கும் திசை நோக்கி
நட்புடன் சிரிக்கிறது....

சுட்டெரிக்கும் சூரியன்
விட்டெறியும் கதிர்களினால்....
தொட்டாலே தீப்பற்றும்
சுட்டெரிக்கும் மண் தரையில்......
வேரூன்றித் தவிக்கும்
அந்த அழகான பூச்செடிக்கு....
நட்பெனும் கரம் நீட்டி
நான் கொடுத்தேன் சிறிது நிழல்.....

நெருப்பு வலையத்தில்
நின்று பூத்தாலும்......
எந்தன் நிழ(மட)ல் கண்டால்
அது நித்தமும்
மலர்ந்து நிற்கும்.....

என் பிரியமான தோழியவள்
பாலைவன ரோஜாதான்.....
என் நட்புப் பூங்காவில்
பளிச்சிடும் ஓர் ரோஜாதான்.....
என் மனதில் நண்பியாய்
நான் நட்டுக்கொண்ட ரோஜாச்செடி....
அது நாள்தோறும் மலர்ந்திருக்க
நான் வணங்கிடுவேன் இறைவனடி....


இளங்கவி

Saturday 29 August 2009

பிணக் காடுகளில்.....


பிணக் காடுகளில்
பேய்களின் ஊர்வலம் நடக்க.....
நாம் பிறந்த தேசம்
நாயின் வாயில்
கேவலமாய்க் கிடக்க.....

ஈழத்து வளங்களெல்லாம்
எதிரியின் காலடியில் நசுங்க....
எம் உறவின் எலும்புகளை
அவன் நாய்கள் திண்டு ருசிக்க....

ஆடுகிறான் பேயாட்டம்
அதை அடக்க இல்லை ஓர் கூட்டம்
உலகத்தின் அசிங்க அரசியலில்
அழிந்தது எம் உயிரோட்டம்....


அன்றொரு நாள் இரவில்....

ஓலைக்குடிசை இடுக்கினிலே
ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு
மயங்கிய பூவினிலே
மது அருந்தும் வன்னிவண்டு....

இன்றைய இரவினிலே.....

இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே
கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு
எதிரியின் கோரப்பசிக்கு
சிதையும் நம் மலர்கள் இன்று.....
இரவின் அமைதியை
நிரப்பும் அழுகுரல்கள்....
இந்தக் கொடுமைகலைக் கொன்றொழிக்க
எழுவாரா நம் புலிகள்....

வன்னியில் இரத்தத்தை
வேர்களால் உள் வாங்கி....
செந்நிறப் பழங்கள் தரும்
நம் விலாட்டு மாமரங்கள்.....

நம் சாம்பல்மேட்டில் ஊர்க்குருவி
தனியாகப் படுத்துக்கொண்டு
ஆள் அரவமின்றி
அமைத்தியாய் தூங்கிறது....

அன்று அறுந்த தொப்புள்கொடி.....
இன்று அறுக்கப்படும் நம் கழுத்து.......
எதிரியின் கோரப் பசிக்கு
குதறப்பட்ட பெண் மார்பகங்கள்........
அத்தனையும் சேர்த்து
அறுசுவை உணவாக.......
ஆளில்லா நம் நிலத்தில்
அனுபவிக்கும் காட்டு நரி....

இரவின் ராச்சியத்தில்
ஈழத்து ஆன்மாக்கள்.......
புனிதத்தின் மேடுகளில்
புன்னகைக்கும் பூட்ஸ் கால்கள்.......
ஆண்மையின் அடிமேட்டில்
அசிங்கமாய் அவன் கைகள்......
இதைக் கேட்டும் மகிழ்ந்திடுவார்
தமிழராம் சில பேர்கள்......

அரக்கக் கரங்களில்
அழுது நிற்கும் நம் தேசம்......
இதை நீக்க யார் வருவார்
என்று நீங்கும் நம் தோஷம்........

எதிரி எங்கள் கோட்டையை
பெருந்தணலில் எரித்தாலும்
அத் தணலையே சுவராக்கி
நம் தேசத்தை கட்டிடுவோம்.....


இளங்கவி

Saturday 15 August 2009

செஞ்சோலைக் குயில்கள்.....


புலியின் கோட்டையிலே
பூத்த சிறுமலர்கள்.....

பொசுங்கி விட்ட பின்பும்
மனதில் பூத்து நிற்கும்
கொடி மலர்கள்....

அவர் செஞ்சோலையில் வளர்ந்த
சிரித்து நின்ற இளந்தளிர்கள்

செத்து நம் சரித்திரத்தில்
இடம்பிடித்த இளம் குயில்கள்....

வாழ்க்கையின் வசந்தத்தை
ஏக்கத்துடன் பார்த்திருந்த....
வெண்பனியில் தவண்டுவரும்
நம் ஈழத்துப் பென்குயின்கள்....

வணக்கத்துடன் சூரியன்
கிழக்குவாசல் வந்துவிட.....
செஞ்சோலைப் பூக்கலெல்லாம்
சிறிதாக மலர்ந்துவிட....
வளமையான பொழுதென்று
வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க....
வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று
தெரியாத தேவதைகள்......

மகிந்தவின் கட்டளைக்கு
எமன்கூட பயந்துகொண்டு
வாகனம் மாற்றி
ஏறுகிறான் கிஃபிரினிலே.....

செஞ்சோலைமேல் பறந்து
பூஞ்சோலையைக் கருக்க
போட்ட குண்டு நாலில்
பிணக்குவியல்கள் பல இடத்தில்....

உலகமே அன்று
வாய் பொத்தி நின்று பார்க்கிறது.....
நாம் அழுத அழுகுரல்கள்
நம் காதில் மட்டுமே கேட்கிறது....
அவர் பிணம் புதைக்கும் கல்லறைக்கோ
அவர் சாம்பல்தான் கிடைக்கிறது....
இதைப் பார்த்த தமிழினமோ
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிறது.....

விழித்திருந்தால் கண்ணீராய்.....
தூக்கத்திலே கனவுகளாய்.....
உணவுண்ணும் போதினிலே
தொண்டையில் சிக்கும் முள்ளுகளாய்....
உன் நினைவோ என்றென்றும்; நம்
நெஞ்சினிலே தைக்கிறது; இந்தக் ....
குஞ்சுகளை நினைத்துவிட்டால்
நம் உடம்பு பஞ்சாக எரிகிறது......

இளங்கவி