Monday 14 September 2009

கொலைக் களத்தில் கோல மயில்.....


மாஞ்சோலை ஒன்றிலே
மாமர நிழலின் கீழ்
மன்னவனின் மடியிலே
மயிலொன்று படுத்திருக்கு.....

மாங்கனிகள் பாரத்தில்
கிளைகள் எல்லாம் நிலம் தடவ....

மயக்கும் விரல் கணையால்
மடி கிடந்த பொன்மயிலின்
மென் ஸ்பரிசம் அவன் தடவ...

ச்சீ.. வேணான்டா....
கையை எடு....
நான் வீட்டை போப்போறன்....

இல்லை..இல்லை
நாளைக்கு வயல் வேலை
நான் வர மாட்டேன்டி..
அதனாலே இன்று
உன்னை தொட்டுவிடப் போறேன்டி.....

இல்லையடா... செல்லம்
இது வேண்டான்டா... இப்போ
நீ வேளைக்கு வயலுக்கு பொகவென்றால்
நாம் வீட்டைபோவோம் இப்போ...

சரியடி போவோம்....
காலையிலே எனக்கு
என்ன சாப்பாடு கொண்டருவாய்
நான் மண்வெட்டி பிடிக்கமுதல்
என்னை மகிழ்விக்க என்னதருவாய்....

அடி....வாங்குவாய்...! ஆசையைப் பாரு....
அம்மா அப்பத்துக்கு போட்டிருக்கா
காலை அப்பம் கொண்டு வாறேன்டா
அதைச் சாப்பிட்டுவிட்டு
ஒழுங்காய் வயலுக்குப் போடா...!

இது நடந்த இடம் கிளிநொச்சியில்
அழகான ஓர் மாலை.....
செஞ்சோலை அருகிருந்த
செழிப்பான மாஞ்சோலை....

இது கிளிநொச்சிக்கு
செல்லடிக்கத் தொடங்க முதல்
தித்தித்த ஓர் காதல்....
மழைபோல் செல்கள் விழத்தொடங்க
சிதறிவிட்ட ஓர் காதல்.....

இந்த ஜோடிப் புறாக்களும்
குடும்பத்துடன் விடாமல் தாம் பறந்து
விஸ்வமடு... உடையார்கட்டு
சுதந்திரபுரம்.... தேவிபுரம்...
புதுக்குடியிருப்பு.... முள்ளிவாய்க்கால் வரை....
வீழ்ந்திருந்த எம் பிணங்கலெள்ளாம்
விடாமல் பார்த்ததினால்
அவர் காதல் கோட்டைகளில்
கருகிய பிணக்குவியல்....

இறுதியில்...
சுதந்திரச் சுவாசம் போய்
மரணத்தின் வாசம்....
துப்பாக்கி முனைகளின் முன்
முட்கம்பி வன வாசம்......

கூட்டத்தில்
அந்தக் கொலைக் களத்தில்.....
பிரித்தெடுத்த வலையத்தில்
அந்தப் புறாக்கள் சந்தித்தும்....
பேச்சு அனுமதியும்
பெற்றிராத அடிமைகளாய்.....

அவளுக்கு துப்பாக்கி முனையில்
தனியறையில் விசாரனை.....
அறையில் கதறல் சத்தம்
அவனுக்குச் சொல்லியது
அந்தச் சோகக்கதை.....

அரை மணி நேரத்தின் பின்
அவழ்ந்த கூந்தல்....
அழமுடியாக் கண்கள்...
வெளிறிய உதடுகள்....
வேகமிழந்த அந்த மானின் நடை....

வெறும் நிலத்தில் வந்து அமர்ந்தாள்
அழாத முகத்துடன்.......
அவள் அங்கே அமர்ந்திருக்க
அடுத்த விசாரணைக்கு.
அழைப்பு அவனுக்கு.....

அங்கே அலறல் சத்தமில்லை
ஆனாலும் அவதிப்படும் சத்தம்......
பின் சிறிது அமைதி....
அதன் பின் துப்பாக்கி சத்தம்....
போனவன் வரவில்லை
பிணம் ஒன்றை
இழுத்துச் செல்லும் காட்சியங்கே...
அதைப் புரிந்துகொண்ட அவளுக்கு
அவன் விரல் பட்ட கன்னத்தில்
நனைக்கிறது கண்ணீர்த் துளிகள்......


இளங்கவி.....

Monday 31 August 2009

பாலைவன ரோஜா...

ஒரு தூய நட்புக்காக...

நம் வாழ்விழந்த சோகத்தில்
வாயடைத்து நின்றேன்......
அழியும் நம் இனத்துக்காய்
நடு வீதிக்கு சென்றேன்.....
அந்த தருணங்கள்
என் வாழ்வின் ரணங்களாய்.....
எப்போதும் சுட்டெரிக்கும்
பாலை வனங்களாய்........

அந்தப் பாலைவனத்தினிலே
சோககீதம் பாடும்
ஓர் சோலைக் குயிலாக.....
திசையேதும் தெரியாமல்
திசைமாறிப் பறக்கின்றேன்....

அந்த நெருப்பு மண்தரையில்
பட்டுவண்ண ரோஜாவொன்று.....
நட்பெனும் நிழல் தேடி
நான் பறக்கும் திசை நோக்கி
நட்புடன் சிரிக்கிறது....

சுட்டெரிக்கும் சூரியன்
விட்டெறியும் கதிர்களினால்....
தொட்டாலே தீப்பற்றும்
சுட்டெரிக்கும் மண் தரையில்......
வேரூன்றித் தவிக்கும்
அந்த அழகான பூச்செடிக்கு....
நட்பெனும் கரம் நீட்டி
நான் கொடுத்தேன் சிறிது நிழல்.....

நெருப்பு வலையத்தில்
நின்று பூத்தாலும்......
எந்தன் நிழ(மட)ல் கண்டால்
அது நித்தமும்
மலர்ந்து நிற்கும்.....

என் பிரியமான தோழியவள்
பாலைவன ரோஜாதான்.....
என் நட்புப் பூங்காவில்
பளிச்சிடும் ஓர் ரோஜாதான்.....
என் மனதில் நண்பியாய்
நான் நட்டுக்கொண்ட ரோஜாச்செடி....
அது நாள்தோறும் மலர்ந்திருக்க
நான் வணங்கிடுவேன் இறைவனடி....


இளங்கவி

Saturday 29 August 2009

பிணக் காடுகளில்.....


பிணக் காடுகளில்
பேய்களின் ஊர்வலம் நடக்க.....
நாம் பிறந்த தேசம்
நாயின் வாயில்
கேவலமாய்க் கிடக்க.....

ஈழத்து வளங்களெல்லாம்
எதிரியின் காலடியில் நசுங்க....
எம் உறவின் எலும்புகளை
அவன் நாய்கள் திண்டு ருசிக்க....

ஆடுகிறான் பேயாட்டம்
அதை அடக்க இல்லை ஓர் கூட்டம்
உலகத்தின் அசிங்க அரசியலில்
அழிந்தது எம் உயிரோட்டம்....


அன்றொரு நாள் இரவில்....

ஓலைக்குடிசை இடுக்கினிலே
ஒற்றை நிலவைப் பார்த்துக்கொண்டு
மயங்கிய பூவினிலே
மது அருந்தும் வன்னிவண்டு....

இன்றைய இரவினிலே.....

இரவின் கோரப்பல்லின் இடுக்கினிலே
கொடிமல்லிகைகள் சிக்கிக்கொண்டு
எதிரியின் கோரப்பசிக்கு
சிதையும் நம் மலர்கள் இன்று.....
இரவின் அமைதியை
நிரப்பும் அழுகுரல்கள்....
இந்தக் கொடுமைகலைக் கொன்றொழிக்க
எழுவாரா நம் புலிகள்....

வன்னியில் இரத்தத்தை
வேர்களால் உள் வாங்கி....
செந்நிறப் பழங்கள் தரும்
நம் விலாட்டு மாமரங்கள்.....

நம் சாம்பல்மேட்டில் ஊர்க்குருவி
தனியாகப் படுத்துக்கொண்டு
ஆள் அரவமின்றி
அமைத்தியாய் தூங்கிறது....

அன்று அறுந்த தொப்புள்கொடி.....
இன்று அறுக்கப்படும் நம் கழுத்து.......
எதிரியின் கோரப் பசிக்கு
குதறப்பட்ட பெண் மார்பகங்கள்........
அத்தனையும் சேர்த்து
அறுசுவை உணவாக.......
ஆளில்லா நம் நிலத்தில்
அனுபவிக்கும் காட்டு நரி....

இரவின் ராச்சியத்தில்
ஈழத்து ஆன்மாக்கள்.......
புனிதத்தின் மேடுகளில்
புன்னகைக்கும் பூட்ஸ் கால்கள்.......
ஆண்மையின் அடிமேட்டில்
அசிங்கமாய் அவன் கைகள்......
இதைக் கேட்டும் மகிழ்ந்திடுவார்
தமிழராம் சில பேர்கள்......

அரக்கக் கரங்களில்
அழுது நிற்கும் நம் தேசம்......
இதை நீக்க யார் வருவார்
என்று நீங்கும் நம் தோஷம்........

எதிரி எங்கள் கோட்டையை
பெருந்தணலில் எரித்தாலும்
அத் தணலையே சுவராக்கி
நம் தேசத்தை கட்டிடுவோம்.....


இளங்கவி

Saturday 15 August 2009

செஞ்சோலைக் குயில்கள்.....


புலியின் கோட்டையிலே
பூத்த சிறுமலர்கள்.....

பொசுங்கி விட்ட பின்பும்
மனதில் பூத்து நிற்கும்
கொடி மலர்கள்....

அவர் செஞ்சோலையில் வளர்ந்த
சிரித்து நின்ற இளந்தளிர்கள்

செத்து நம் சரித்திரத்தில்
இடம்பிடித்த இளம் குயில்கள்....

வாழ்க்கையின் வசந்தத்தை
ஏக்கத்துடன் பார்த்திருந்த....
வெண்பனியில் தவண்டுவரும்
நம் ஈழத்துப் பென்குயின்கள்....

வணக்கத்துடன் சூரியன்
கிழக்குவாசல் வந்துவிட.....
செஞ்சோலைப் பூக்கலெல்லாம்
சிறிதாக மலர்ந்துவிட....
வளமையான பொழுதென்று
வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க....
வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று
தெரியாத தேவதைகள்......

மகிந்தவின் கட்டளைக்கு
எமன்கூட பயந்துகொண்டு
வாகனம் மாற்றி
ஏறுகிறான் கிஃபிரினிலே.....

செஞ்சோலைமேல் பறந்து
பூஞ்சோலையைக் கருக்க
போட்ட குண்டு நாலில்
பிணக்குவியல்கள் பல இடத்தில்....

உலகமே அன்று
வாய் பொத்தி நின்று பார்க்கிறது.....
நாம் அழுத அழுகுரல்கள்
நம் காதில் மட்டுமே கேட்கிறது....
அவர் பிணம் புதைக்கும் கல்லறைக்கோ
அவர் சாம்பல்தான் கிடைக்கிறது....
இதைப் பார்த்த தமிழினமோ
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிறது.....

விழித்திருந்தால் கண்ணீராய்.....
தூக்கத்திலே கனவுகளாய்.....
உணவுண்ணும் போதினிலே
தொண்டையில் சிக்கும் முள்ளுகளாய்....
உன் நினைவோ என்றென்றும்; நம்
நெஞ்சினிலே தைக்கிறது; இந்தக் ....
குஞ்சுகளை நினைத்துவிட்டால்
நம் உடம்பு பஞ்சாக எரிகிறது......

இளங்கவி

Friday 24 July 2009

மழை....



மனதைத் தாலாட்டும்
இயற்கையின் இன்பம் நீ......

மகிழ்வான சிறுவயதின்
என்னை மகிழ்வித்த சொர்க்கம் நீ.....

சிறுவனாய் நான்.....

விளையாடி வரும்போது
வெப்பமாகும் என் தேகம்.....
மேலிருந்து நீ வந்து வந்து
குளிரவைப்பாய் என் தேகம்....
என் சூடான சுவாசமும்
சில்லென்று குளிர்ந்துவிடும்....
அதை இன்றும் நினைத்தாலும்
ஜில்லென்று சுகம் தரும்....

இளைஞனாய் நான்......

தெருவோரம் அமர்ந்து
தேடுவேன் என் பேரழகை....
திடீரென்று நீ வருவாய்
சினத்தையும் நீ தருவாய்.....

அந்த நேரம் என்
அழகுச்சிலை வருவாள்...
நீ துளிகளாய் அவள் முகத்தினிலே
தொட்டதுமே ஒட்டிடுவாய்....
ஒட்டிய துளியொன்று
அவள் மூக்குவளி இறங்கிவந்து
அவள் மேல் உதட்டை தொட்டுவிட....
அவள் அதை உள்ளிழுத்து
என் பக்கமாய் ஊதிவிட....
அப்போது அவள்
உதடுசொல்லும் ஜாலத்தில்
என்னுயிரைக் கொடுத்தவன் நான்....
அந்த மொழியை இன்றுவரை
என் இதயத்தில் ரசிப்பவன் நான்........
அதனாலே இன்றுவரை உன்னை
ரசிக்கும் கலைஞன் நான்.....

ஆனால் உன்னை எனக்கு
இப்பொது ஓரளவும் பிடிக்கவில்லை...

ஏனென்று கேட்காதே
எப்படிப் பதில் சொல்வேன்....
ஏங்கி நிற்கும் நம் உறவுகளின்
எதிர்காலம் என் சொல்வேன்....

நம் அனைத்து உறவுகளும்
முகாமில் அடைந்திருக்க
அங்கே ஒரு நாளேனும் உன் வருகை
உன்னை அருவருக்க வைக்கிறது.....

அன்றோ நீ எங்கள்
அழகுக்கு அழகு தந்தாய்

இன்றோ நீ இங்கே
அசிங்கமெல்லாம் கூட்டிவந்து
எங்களை அவலப்படுத்துகிறாய்......

பல்லாயிரம் கிருமிகளை
நம் பாதங்களில் சேர்க்கின்றாய்....
படுக்கும் இரவினிலும்
நம்மை பாடாய் படுத்துகிறாய்....

உன் தொல்லை போதும்
நாம் அழைக்கும் வரை
வர வேண்டாம்.....
அழையாத விருந்தாளியாய்
எங்களுக்கு அவலத்தை
தர வேண்டாம்.....

இளங்கவி

Tuesday 14 July 2009

என் இனிய முதலிரவு....



என் வலைப்பூவில் சிக்கிய
வண்ணத்துப் பூச்சியவள்....
என் நெஞ்சில் நிறங்கள் பலதூவி
நிறக்கோலம் போட்ட மயில்.....

வகை வகையாய் பேசி
என் நெஞ்சில் தேற்றினாள்....
வருவேன் வருவேனென்று
என் நாளும் எனை ஏமாற்றினாள்.....

வலைப்பூவில் முத்தங்களை
வரிசையாய் வழங்கினாள்......
நிஜத்திலே வேண்டுமென்றால்
கொஞ்சம் பொறு என்று சீண்டினாள்....

பல நாட்கள் முயற்சியில்
சந்திக்க ஏற்பாடு.....
அதனால் மறுத்துவிட்டேன்
என் வீட்டிலே சாப்பாடு....

விரைந்த என் வாகனம்
ஓர் விடுதிமுன் நிற்கிறது.....
அவள் வரவுக்காய் ஏங்கி
என் நெஞ்சோ தவிக்கிறது.....!
என் MP3 ல் அவள் வருவாளா?
பாடலும் ஒலிக்கிறது.....
அதை அமைதியாய் கேட்டு
என் மனமோ ரசிக்கிறது.....

ஏழு மணியிலிருந்து
நடு இரவும் வந்திட....
தூக்கமோ என் கண்ணை
முழுதாக மூடிட....

டொக் டொக்.. கதவோசை
காதில் கேட்டுவிட.....
அவசரமாய் ஓடிச்சென்று
என் கையோ கதவை திறந்துவிட.....
ஒன்பதுமணிக்கு முன் நீங்கள்
அறையை விடவேடும்....
இப்போ நேரம் எட்டரை
விரைவில் அறைத்திறப்பு தரவேண்டும்....

ஆகா...! அப்பத்தான் உணர்ந்தேன்
நான் அடிமுட்டாள் பயலென்று....
தனிமையிலே அனுபவித்தேன்
அவளின்றி முதலிரவொன்று.....

அவள் நினைவில் பல நாட்கள்
என் தூக்கம் தொலைத்திருந்தேன்.....
நேற்றுரவு அமைதியான இரவொன்றை
அவளால் பெற்றிருந்தேன்....
என் வாழ்க்கையில் மறக்காத
ஓர் இனிய முதலிரவு....
வலைப்பூவின் கிளியொன்று
பரிசளித்த ஓர் இரவு.....!

இளங்கவி

Saturday 4 July 2009

மரங்கொத்தி பறவை...


என் மரம் போன்ற இதயத்தை
இன்ப வலி தந்து
விழியெனும் கோடாலியால்
வெட்டிப் பிளந்தவள்......

அவளைச் சந்தித்தேன்
சரித்திர நிகழ்வொன்றில்
அங்கே சாயாத இச்சரித்திரத்தை
ஒரு நொடியில் சாய்த்துவிட்டாள்.....

எண்ணூறு பாகை வெப்பத்தை
தன் விழிகளினால்
என் விழிக்குள் பாய்ச்சி
என் இரும்பு இதயத்தை
ஒரு நொடியில் உருக்கிவிட்டாள்...
அந்த உருகிய இதயம்
இன்னும் ஒட்டவில்லை...
என் உள் நின்று ஓடி
என்னை உருமாற வைக்கிறது...
குளிர் நீரில் குளித்து
குளிரப் பார்க்கிறேன்...
ஆனால் கொதி நீரில் குளித்ததாய்
கொதித்துப் போகிறேன்....

நிமிடதினில் மாறும்
தமிழர் சரித்திரம் ஒருபக்கம்....
ஒரு நொடியில் நீ மாற்றிவிட்ட
என் சரித்திரமோ மறுபக்கம்....
பல கவலை மனதில் நிற்க
இன்னுமோன்றை கூட்டிவிட்டாய்.....
பகலிலும் என்னை
பாதியாய் தூங்கவைத்தாய்...

தமிழன் கவலை சொல்ல.....
மக்கள் மனங்களை வெல்ல.....
மறக்காமல் என் கடமையை
மனித நேயத்துடன் செய்கின்றேன்.....
இருந்தும் போகும இடமெல்லாம்
உன் பார்வையையும் தேடுகிறேன்...

வந்திடடி என் மர(ன)ங்கொத்தி
உன் பார்வை தந்திடடி....
என் உரிமைப் போருக்கு
முழுப்பலம் நீ தந்திடடி....

இளங்கவி......

Sunday 28 June 2009

வானவில்


வண்ணங்களின் பூஞ்சோலை
மனதை மகிழ்விக்கும் மாஞ்சோலை
இயற்கை உவந்தளிக்கும்
அழகான ஓர் மாலை.....

எரிக்கும் எதிரிக்கு முன்
எதிரில் நின்று சண்டையிடும்
சதாரண நீர்த்துளிகளின்
வீரத்துக்கு ஒர் குறியீடு....

இயற்கை தந்த
மழலையின் சிரிப்பு....
ஒரு கணமே மகிழ்வித்து
உடனே மறைந்துவிடும்
மனதில் உறைந்த நொடிப்பொழுது......

பக்கத்தில் காதலி; இருந்தும்
பார்வை விலக்கி உனை
பார்க்க வைக்கும்
பகலிலின் பெள்ர்ணமி......

விஞ்ஞானதில்
நிறங்க்களின் ஆராட்சிக்கு
முதலும் நீ முடிவும் நீ......
மனதிலும்
மோகத்தை தூண்டிவிடும்
கவர்ச்சிப் புன்னகை......
மொத்தத்தில்
மனதை மகிழ்வித்து
உடனேயே கொன்றுவிடும்
அழகான கொலைகாரி.....

இளங்கவி

Friday 26 June 2009

நான் ரசித்த ஊதாப்பூ


பூக்கள் நடந்து வர
வண்டுகள் மறைந்து நின்று
கண்குளிரப் பார்க்கும்
அழகான சோலை; ஆம்
அது ஒரு சாலை.....

அங்கே நானும் ஒர் பார்வையாளன்
இல்லை.. இல்லை..!
பகுதி நேர பங்காளன்....

வழமை போல்
வரிசையாய் பூக்கள் வலம்வர
அதிலே ஊருக்கு புதிசான
ஊதாப்பூ நடந்துவர
என் முழிகள் பிதுங்கும் வரை
அவளை முழுவதுமாய் பார்க்கிறேன்....

என்ன அதிசயம்
முகவரி தொலைத்தவளாய்
என்னிடம் வந்து
இந்த முகவரி தெரியுமா? என்றாள்
ஆமாம் ..தெரியும் என்றேன்
வாயில் நீர் வழிய...!

சட்டென்று அவள் அருகில்
கரு வண்டொன்று
என்ன கோவமா? கொஞ்சம் லேற் என
ச்சீ.. போடா என்றுவிட்டு
அவனைக் கைப்பிடித்து செல்கிறாள்....

என் கண நேரக்காதலி
இந்தப் பொன்வண்டு பார்த்து நிற்க
அக் கருவண்டுடன் செல்கிறாள்...

ஆவென்று வாய் திறந்து
அவள் சென்ற வழி பார்க்கிறேன்
அழகாய் ஓர் வண்டு
என் வாயுள் செல்கிறது....
ஆமாங்க..! நிஜ வண்டு..!
ச்சீ.. கறுமம் ..கறுமம் என்று
அதைக் காறித் துப்பிவிட்டு
என் கடமையைத் தொடர்கிறேன்.....


இளங்கவி

Monday 22 June 2009

ஆளுயர கொக்குக்கு அரையடி வாத்தாக.....



இந்த ஆளுயர கொக்குக்கு
அரைடயடி வாத்தாக
என்னை ஆட்டம் காணவைத்த
என் அதிசய சுந்தரியே...!
என்னடி உன் அழகு
எனக்கு புரியவில்லை: இருந்தும்
உன்னைப் பார்த்த மறுகணமே
எனக்கு தலைகால் புரியவில்லை.....


நீ உருவத்தில் குட்டை; இருந்தும்
ஒய்யார நடை உனக்கு.....
நீ ஒருகணம் பார்த்தாலும்;என் வாயில்
ஊறுமடி நீர் எனக்கு...
குலுங்கி நிற்கும்; குண்டுக்
கொய்யாப்பழ அழகி
பார்த்தாலே சிலிர்க்கவைக்கும்
நடைகொண்ட பின்னழகி.....


இதழ் சுளித்து சொக்கவைப்பாய்....
தலைமுடிவாரி கிறங்கவைப்பாய்....
கடைக் கண்ணால் பார்த்து
என்னைக் கனவிலும் சிரிக்கவைப்பாய்....
அதுவுமே போதாமல்
நான் போகும் இடமெல்லாம்
என்னை பித்தன் போல் சுற்றவைப்பாய்....


நீ எனக்கு ஓர்
அந்தியின் செவ்வந்தி.....
என் நாளும் உன் வலையில்; என்னை
சிக்கவைக்கும் ஓர் சிலந்தி....
சலங்கைபோல் சிரித்திடுவாய்
என் கனவில் நீ
கரும்புபோல் இனித்திடுவாய்...
முத்தமொன்று இடவந்தால்
தொட்டாச்சிணுங்கி போல் சுருங்கிடுவாய்....
கனவிலே வந்ததுமே
கனிவோடு பேசிடுவாய்
கட்டி அணைக்கச் சொன்னால்
எறும்பாக கடித்திடுவாய்...


சாப்பிட்ட பின் ஏப்பத்திலும்
உன்மணம் தான் வருகுதடி......
என் இதயத்தில் கலந்துவிட்ட
உன் வாசம் தான் மணக்குதடி...


கனவில் தான் நீ இனிப்பாய்
நேரில் கண்டதுமே நீ முறைப்பாய்....
கதைக்கவென்று அருகில் வந்தால்
பாவற்காய் போல நீ கசப்பாய்....
ஏனடி நீ என்னை
இப்படிப் படுத்துகிறாய்
என் நெஞ்ச்சை மண்ணெண்ணையால்
என் நாளும் கொளுத்துகிறாய்....


இந்த வாத்துக்கு இந்தக் கொக்கு
உனக்காய் இறைவன் தந்த சொத்து
வந்துவிடு நீ எனக்கு
நான் உனக்காக பிறந்த மொக்கு...


என்னை ஏற்றுக்கொள்ளு...
அதன்பின் சேர்த்துக்கொள்ளு....
சொர்க்கமென்றால் எதுவென்று
ஒரு நாழிகையில் புரியவைப்பேன்....
இருந்தும் உன் மனதில்
நான் உயரமென்று நீ நினைத்தால்
எங்கள் உயரத்தை சரி செய்ய
உனக்காக எந்தன்
காலையும் நான் வெட்டிடுவேன்....



இளங்கவி

Wednesday 10 June 2009

சிதைக்கப்பட்ட சித்திரங்கள்



அழகான இந்தச் சித்திரத்தை
அசிங்கமாய் சிதைத்தது யார் ?; தமிழர்
இனக்கொலையின் அலையடிப்பில்
நம் குழந்தையொன்றின் சிதறலை பார்....!
ஏனென்று தெரியாமல்
இறக்கும் நம் செல்வங்கள்.....
அவர் இறக்கவில்லை விதைக்கப்பட்ட
ஈழத்து நெருஞ்சி முட்கள்....
எதிரியின் கால்படும் இடமெல்லாம்
கண்டபடி குத்தி நிற்கும்....
அவன் வாழ்வின் நின்மதியை
என் நாளும் கெடுத்து நிற்கும்......


இளங்கவி

Friday 5 June 2009

என் காதலி பேரழகி

கவிதை - இளங்கவி

இருண்ட வானத்தில
அழகாய் ஓர் நிலவு.....
என் இருண்ட வாழ்க்கையிலும்
வந்தாள் ஓர் வெண்ணிலவு......

என் காலையும் அவளானாள்
மாலையும் அவளானாள்
தூக்கம் மயக்கும் இரவினிலே
என் படுக்கையிலே பூவானாள்....

அவளை மானென்று சொல்லமாட்டேன்
நடை தான் மான் அழகு
மீனென்று சொல்லமாட்டேன்
கண் தான் மீன் அழகு
மயிலென்று சொல்லமாட்டேன்
வதனம் தான் மயில் அழகு
குயிலென்றும் சொல்லமாட்டேன்
குரல் தான் குயில் அழகு....

அவள் பலகூட்டம் மான் அழகும்
பல்லாயிரம் மீன் அழகும்
பல நூறு மயில் அழகும்
பல குயிலின் பாட்ட்ழகும்
ஒன்றாகச் சேர்ந்த
பஞ்சு மெத்தை அவள்
பலதரம் சுவைத்தாலும்
சலிக்காத இன்பமவள்....

அவள் ஈழத்தில் இருந்திருந்தால்
செவ்வாளை போல் சுவைப்பாள்
இங்கே இருப்பதினாள்
ஸ்ரோபெரி போல் இனித்தாள்
தேனில் தோய்ந்து கொண்ட
செர்ரிப்பழம் சுவையவள்
தொட்டாலே கை மணக்கும்
தேன் சுவை அன்னாசி....

இரண்டு சேலத்து மாம்பழத்தை
இடைமேலே தாங்கி
அவள் நடந்துவரும் நடைபார்த்தால்
பிணம் கூட வாய் பிளக்கும்
பின்னழகை எடை போட்டால்
வாய் நீரும் வற்றிவிடும்....
முழு அழகை எடைபோட்டால்
மூச்சே நின்று விடும்....

தொட்ட இடமெல்லாம்
இலவம் பஞ்சானாள்
ஓரிடத்தில் மட்டும்
கையை சுட்டுவிடும் நெருப்பானாள்
பனிமலையாக மாறி
என் குளிர் ஜுரம் போக்கிடுவாள்
சமயததில் நெருப்பாக மாறி
கட்டிலையே பொசிக்கிடுவாள்...

இந்தக் குளிரிலே காய்வதற்கு
எனக்கு கம்பிளியாய் நீ வேண்டும்...
அதற்கு காலையிலே எழுந்து
கண்ணாடிமுன் நிற்கவேண்டும்;காரணம்
கண்ணாடியில் நான் ஒட்டிவைத்த
கற்பனையின் விம்பமே
உன்னை நிஜமாக அடைவதற்கு
நான் விண்ண்ப்பம் கோருகிறேன்....

வேண்டியவர் விண்ணப்பிக்க
எண்ணிக்கைக்கு தடையில்லை...
என் கண்ணாடிக் கற்பனைக்கு
குறைந்தாலும் வருத்தமில்லை.....
என் கட்டில் உடைந்தாலும்
புதுக் கட்டில் வாங்கிடுவேன்
என் கண்ணாடி உடைந்து விட்டால்
என் கட்டழகி உடைந்திடுவாள்....


இளங்கவி

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்

வீழ்ந்த வீரர்களும்... வென்ற கோழைகளும்

கவிதை - இளங்கவி

முள்ளிவாய்க்கால்....
தமிழர் பிணங்கள் பல வீழ்ந்து....
மலைகள் பல சாய்ந்து.....

இரத்தத்தில்
நிலமெல்லாம் குளமாகி......
தசைகளிலே மண்ணெல்லாம் சேறாகி.....

இறுதிவரை
வீரம் சொல்லிய மண்.....
வேங்கைகை பல சாய்ந்த மண்....

வல்லரசின்
வீரர்களைச் சேர்த்து....

வாங்கி வந்த
குண்டுகளைப் போட்டு....

பறந்து வந்து
எரிமலையை போட்டு....

பாய்ந்து வரும்
பீரங்கியால் தாக்கி...

எத்தனை படுகொலையை
இலகுவாய் செய்துவிட்டு......

வெற்றியாம் வெற்றி....!
அவர்கள் வீரராம் விரர்....!

கோழையின் வெற்றி
உன் கொல்லைப்புறம் மட்டும் தான்....

வந்தவர்கள் போய்விட்டால்
உன் வாழ்க்கை மட்டம் தான்....

நம் வீரர் பலர் வீழ்ந்தாலும்
விடாத பயம் உனக்கேன்....?
நீ நூற்றுவிட்ட விடுதலை தீ
நாட்களானால் பற்றுமென்றா....?

பதறாதே கோழைகளே
பதில் அதற்கு உன்னிடம் தான்....!
என் நாளும் பக்கத்தில் வரமாட்டார்.....
உலக சன சமூகந்தான்....!

ஓர் இனத்தின் விடுதலையை
ஏளனமாய் பார்க்காதே...
வரலாறுகள் படித்துப் பார்
பின்னர் உன்கண்ணும் தூங்காதே....!

நீ வீரர்களை வீழ்த்திவிட்டாய்
நம் வீரம் விழவில்லை.....
விடுதலை கிடைக்கும் வரை
நாம் தூங்கப் போவதில்லை....

இளங்கவி

Wednesday 3 June 2009

நீ என்றும் என் காதலி....

கவிதை - இளங்கவி

அதிகாலை ஓர் அழைப்பு மணி
அவசரமாய் சென்று யாரது...?
பதில்.. நான் தான்
உன் தேவதை...!
கதவை திறக்கிறேன்
யார் தேவதையா...?
ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....!
அனைத்தையும் அடித்துவிடும்
அழகான ஓர் முகம்...
ஆனாலும் கண்களிலே கண்ணீர்...
கலைந்த கூந்தல்....
மாற்றான் கைபட்டு
கசங்கிய மேலாடை...
மான மறைப்புகளில்
ஆங்காங்கே இரத்தத் துளி.....
கலைந்த கூந்தலையும்
அலங்கரித்த கார்த்திகைப் பூ

என் கண்முன்னே கதறுகிறாள்
ஏன் என்னை கைவிட்டாய்..?
நான் கேட்டென்...?
எப்போ உனை கைவிட்டேன்...?
நான் உன்னைப் பார்த்ததில்லை...!

அட பாதகனே..
எனை பிரிய மனமின்றி
அன்று ஏங்கி அழுது நின்றாய்...
எனை விட்டு பிரிய முதல்
என் காலையே பிடித்து நின்றாய்.....
நீ விட்ட கண்ணீர் துளி
என் மார்பை நனைத்துவிட
என் மார்பு துடித்து நின்று
உன் அன்பை பெற்றதுவே...!
அன்று தான் சொன்னேனே
உன் கடமை வெளியிலே
உனக்காய் காத்திருக்கு
காலம் வரும் போது
நான் வருவேன்; உன்னிடம்
அதுவரை காத்திருப்பாய்...!
அத்தனையும் மறந்தாயா...?
பாவி அடியோடு எனை மறந்தாயா..?

அன்று நான் உன்னை
கவர்ந்திருந்த கட்டழகி....
இன்று நான் உனக்கு
கசக்கப்பட்டு ரோஜாவா...?
சரி என் பெயர்கூட மறந்ததா...?
நான் தான் தமிழீழம்...
எதிரியின் கைபட்டு
உடைந்துவிட்ட உன் ஈழம்...!
சரி நான் வருகிறேன்
என்னை காதலிக்க மறக்காதே...!
காதலிக்க மறந்தாலும்
காக்கவேனும் மறக்காதே...!

ஐயோ என் செல்வமே... நீயா..இது...?
அவளைத் தடுக்க என் கால்கள்
அவசரமாய் அடிவைக்க
முடியவில்லை முயன்றும் முடியவில்லை
அவள் பெயர்சொல்லிக் கதறுகிறேன்...
உடம்பெல்லாம் வியர்த்து
நெஞ்சு பதைபதைக்க
முழிக்கிறென் ..! ஆம் விழிக்கிறேன்
கனவு கலைந்து
கட்டிலில் இருந்து....
ஆம்..! என் கடமை புரிகிறது
என் கால்கலும் செல்கிறது..
ஆம் ..! தவறாமல் என் கடமைக்காய்
என் கால்கள் என் நாளும் செல்கிறது....

இளங்கவி

Thursday 14 May 2009

என் காதலி தமிழீழச்சி......

இளங்கவி -தமிழீழகாதல்


காணாத இறைவனிடம்
வரம் கேட்கும் பக்தன் போல்
நீ காட்டா பார்வைக்காய்
காத்திருந்தேன் சிலவருடம்
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்.......

பெண்களின் உதடை
கொவ்வைப்பழமாக வர்ணிப்பார்
உன் உதட்டின் நிறமோ
கரு நாவல் பழம் போல
இருந்தும் முத்தமிட மனமேங்கிடும்
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்......

பெண்ணின் மார்பழகு
மாங்கனிக்கு உவமைகொள்ள
உந்தன் மார்பழகோ
தென்னம் குரும்பட்டியாய் ஒழிந்துகொள்ள
இருந்தாலும் ரசித்துக்கொள்வேன்
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்

நீ மறைந்திருக்கும் இதர அழகை
வர்ணிக்க மனமேங்கிறது
ஆனாலும் முடியவில்லை
காரணம் நீ தமிழீழச்சி என்பதால்
அதுதான் நம் தமிழீழத்தின்
காதலின் சிறப்பு என்பதாலும் தான்....
உன்னை அவ்வளவு பிடிக்கும்
என் கறுப்பி....!


இளங்கவி

Monday 23 March 2009

என் ரோசாப்பூ சேலைக்காரி....

கவிதை - இளங்கவி.......


குட்டைப் பாவாடையுடன்
மனதை கொள்ளை கொள்ளும்
சிரிப்பு கொண்டு
நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய்
நானும் உன்னை சுற்றிடுவேன்......

கரம்சுண்டல் வாங்கி வந்து
என் கைகளிலே வைத்திடுவாய்
வாங்க மறுத்துவிட்டால்
என் காலை மிரித்திடுவாய்.....
கடைக்கண் பார்வைகொண்டும்
அடித்திடுவாய்....

நல்லூர் முருகனை மறந்துவிட்டு
உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன்
முழு கண்கள் பார்க்கமுதல்
இருளாக மறைந்திடுவேன்....

சில திருவிழாக்கள் ஓடி
உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட
ரோசாப்பூ சேலைகட்டி
என்மனதை ஜோராக இழுத்தவளே...!

சிறுவயதில் நீ தந்த
பொரிகடலை சுவையும் போய்....
நீ சிறிதாக வாங்கித்தரும்
கரம்சுண்டல் கசந்தும் போய்....
உன் காந்த இதழ் மட்டும்
கொக்கின் கண்களிலே மீனாக.....
கோவில் வீதியெங்கும்
அலைந்திடுவேன் உன்
இதழ் சுவைக்க தேனாக.....

இருளான பக்கத்தில்
கொப்பருக்குத் தெரியாமல்
கிஸ் அடிக்கத் துடித்திடுவேன்.....
கொப்பர் நான் தொடர பார்த்துவிட்டால்
கொட்டக்கொட்ட முழித்திடுவேன்....

என் முயற்சியின் பலனை
எனக்கு முழுவதுமாய் தந்தவளே...!
என் மூச்செல்லாம் நீயாகி
என்னை முழுதாகத் தின்றவளே.....

நம் மனதெல்லாம் சேர்ந்து
மகிழ்வாக வாழ முதல்
உன் கூட்டை சிதைத்துவிட்டான்
எம்மை கொன்றொளிக்கும் சிங்களவன்.....

அன்றுமுதல் கோவில் வீதியிலே
என் குளிர் நிலவை காணவில்லை
நான் பெற்றிருந்த முத்தத்தின்
நினைவுகளும் நீங்கவில்லை.....

கூடு இழந்த குருவியாய்
நீ எங்கோ சென்றுவிட....
சிங்களவன் கொடுமையினால்
நானும் புலம்பெயர்ந்தேன்
இங்கே வந்து விட....

சிலகாலம் சென்றறிந்தேன்
என் செல்லம் நீ வன்னியிலே.....
தொடர்பின்றி இருந்தாலும்
உன் நினைவெல்லாம் என் மனதினிலே.....
என் பாசமென்னும் பட்டினிக்கு
உணவழித்த ராசாத்தி.....
எத்தனை நாள் அம்மா
நீ உணவருந்தி நாளாச்சு.......

கொஞ்சம் பொறுத்துக்கொள்
வந்திடுமே நம்
வணங்கா மண் அங்கே....
உங்களை வாழவைக்கும் உணவினிலே
என் அன்பும் கலந்திருக்கும்
பார் அங்கே....
கடலிலே எதிரியதை அழித்தாலும்
என் அன்புணவு உனைச்சேரும்
கடல்மீன்கள் வழயாக
என் கரைந்த உயிர்
உன் உடல் சேரும்.....

என் உணவுத் துளிகளிலே
பழைய முத்தத்திற்கு பதில்
முத்தமொன்று வைத்திருக்கேன்
முழுவதுமாய் ஏற்றுவிடு.....
திருமணம் முடிந்திருந்தால்
என் முத்தத்தை கடலிலே கரைத்துவிடு.......

கலங்காதே என் கண்மணியே
உன் கண் நீங்கா காதலன் நான்; நீ
என் கனவெல்லாம் ஆட்சிசெய்யும்
என் அன்புத் தேவதை தான்.....


இளங்கவி

Sunday 22 March 2009

போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்....

கவிதை....


அன்புள்ள மகளுக்கு
உன் அம்மாவின் ஆசிர்வாதம்
காவலுக்கு செல்கிறேன் என்றாய்
எம் இனத்தை காக்க
எழுந்துவிட்டேன் என்றாய்..... !
உன் ஆசைத்தம்பியை
பட்டினிக்கு பறிகொடுத்தாய்
அவனைப்போல் பலபேரைக்காக்க
பகைவனுடன் மோதச்சென்றாய்

எனக்கும் தெரியும்
நீ புலியாக பிறக்கவில்லை
புலியாக மாற்றப்பட்டாய்
எங்களின் விடுதலைப் போரிலே
புள்ளியாக என்னையும் ; எதிரி
புலியாக வைத்துவிட்டான்
அவன் உருவாக்கிய புலிகலெல்லாம்
பிரம்மிட்டின் உருவம் போல்
வியாபித்து எழுதிடுவர் ; என்று
எதிரி இன்னமும் நினைக்கவில்லை
என்று எழுதிவைத்து நீ சென்றாய்....

பட்டினி எங்களுக்கு
பழகிவிட்ட ஒன்று என்றாய்
பசிதாங்காப் பிள்ளைக்கு
அது பரிதாபச் சாவென்றாய்
பல குண்டு போட்டு
அன்றாடம் படுகொலைகள்
அத்துடன் பட்டினியும் போட்டு
தொடங்கிவிட்டான் நர பலிகள்...

இதை உலக நாடனைத்தும்
பார்க்காத ஒவ்வோர் கணமும்
பல புலிகள் பிறக்கின்றார்
நம் மண்ணை புண்ணிய பூமியாக்க
எதிரியுடன் போரை முன்னெடுக்கின்றார்...!

மேற்குலகே நீர் சேர்ந்து
இனப்படிகொலையைத் தடுத்துவிடு...!
எம்மையும் தனித்து
நம் ஈழத்தில் வாழவிடு...!
எமை நீங்கள் வாழவிட்டால்
ஆயுதம் பிடித்த கைகள்
அரசியல் சாசனங்க்கள் எழுதாதா...?
நம் அழுக்குத்தண்ணீரும்
அமுதமாய் மாறாதா...?
நம் பசிபோக்கும் அளவிற்கு
எம் விளை நிலங்கள் விழையாதா...?
நாம் பதுங்கும் பதுங்குகுழியில்
பல ரயில்கள் ஓடாதா...?
இஸ்ரேலின் பாலை வனங்கல் கூட
பளிங்கு மண்டபமாய் மாறுகையில்
எம் தமிழீழ நிலங்கலிலே
பொன் மலைகள் எழும்பாதா...?

கொலைக்களத்தில் பிறந்து
முதலான முலைப்பால்
முண்டி முண்டி குடித்தபின்னர்
எதிரியின் குண்டுவீச்சில்
முலையொருபக்கம்; தாயின்
உடல் ஒருபக்கம்
இதை பார்த்து வளர்ந்த பிள்ளை
என்ன புத்தனாவா வளர்ந்திடுவான்...?
புலியாய் தான் வளர்ந்திடுவான்....!

சர்வதேசமே அறிந்துகொள்....!
எதிரியை அனைத்தயும் விட்டிடச்சொல்....!
புள்ளியொன்றை அழித்துவிட்டு
புலியை அழித்துவிட்டான்: என்று
சொல்லும் சிங்களனிடம்
சேதியொன்றை எடுத்துச் செல்
தமிழன் வாழ விட்டால்
எதிரியின் தலைதப்பும் என்று சொல்....!
இதைவிட்டு நம்மை அழிக்கவந்தால்
குமரிக் கண்டத்தில்
இந்தத் தீவு மட்டும் மிதந்து நிற்கும்
கோணேஸ்வரக் கடலில்
கோத்த பாயக் குலத்தின்
குருதியில்தான் உன் கப்பல் மிதக்கும்....

மகளே..! கடிதம் பார்த்து
உணர்வெல்லாம் பொங்கிவிட்டேன்
உலக்குக்கு நீ சொன்ன
உண்மையெல்லாம் அறிந்து கொண்டேன்
உன் மனதின் ஆதங்கம்
அனைத்தையும் தெரிந்து கொண்டேன்
நானும் இம் மண் காக்க
சில நாட்களிலே பயிற்சிகொள்வேன்
உன் களத்தில் முன்னரங்கை
காக்கவென்று நானும் போரிடுவேன்
கலக்கம் எதுமின்றி
காத்திடு நம் மண்ணை
உன் வீரம் கண்டுகொள்ள
களத்துக்கு நானும் விரைகின்றேன்....



இளங்கவி

நம் தலைவனின் கனவு நிஜமாக.....

கவிதை - இளங்கவி


அடிமை வாழ்வில்
குப்பையாய் கிடந்தோம்
கூட்டுவார் இன்றி
காற்றுக்கும் பறந்தோம்
ஏய் தமிழா...!
உன் தேச மண்ணில்
குப்பையாய் கிடக்கின்றாய்
கூனிக் கிடந்து
கூன் விழுந்திட்டாய் ; என்று
இந்தக் குப்பை மேட்டிலே
ஓர் பொறியாக விழுந்தாய்
சிறுதணல் மூட்டினாய்
சிறிதாகவும் புகைந்தாய்; ;பின்
செந்தணல் ஆகி
விடுதலை தீயை மூட்டினாய்
இன்றோ கோடி தமிழனின்
மனங்களில் கொழுந்து விட்டெரிந்து
விடுதலைத் தீயாய்
வீறுகொண்டு எரிகிறாய்......!

வேதனை வாழ்விலும்
வீரியம் தந்தவன்.....
எங்களின் வாழ்வுக்காய்
தன் வாழ்வையும் மறந்தவன்......
இருபதில் தொடங்கி
இருபதினாயிரம் கண்டாய்......
இன்னமும் காண்பாய்
இறுதித் தமிழனையும் மாற்றுவாய்...!

எதிரியின் பலமெல்லாம்
உன் காலில் எறும்பாய்......
எம்மவர் துரோகமும்
உனக்கு கசக்கும் மருந்தாய்.......
உன் கரும்புலிக் குஞ்சுகள்
நம் ஈழத்தின் தடுப்பாய்........
எமை காக்கும் புலிப்படை
உன் கரங்களில் பலமாய்......
எம்மை காக்கும் தெய்வம் நீ.....
உலகுக்கே கசக்கும் வீரம் நீ......

நீ மூட்டிய தீயின்றி
எதிரியை உருக்கிடும் இரும்பாய்....
நீ கண்ட கனவின்று
நிகழப்போகுது நிஜமாய்....
புலிக்கொடியின்று நம்
கொடியென ஏற்றார்......
நீ கண்ட நம் ஈழம்
நாளை நம் நாடென ஏற்பார்.....

அதுவரை ஓயாது நம்போர்
நம் கரங்கள் சேரும்......
எம் கூச்சலின் சக்தி
உன் கரத்துக்கு பலம்சேர்க்கும்.......
ஒன்றுசேர்ந்த நம் எழுச்சி
எமக்கு நம் விடியலைக் காட்டும்.......
உன் துணை கொண்டு விரைவில்
நம் விடுதலை மீட்கும்......


இளங்கவி