Wednesday 3 June 2009

நீ என்றும் என் காதலி....

கவிதை - இளங்கவி

அதிகாலை ஓர் அழைப்பு மணி
அவசரமாய் சென்று யாரது...?
பதில்.. நான் தான்
உன் தேவதை...!
கதவை திறக்கிறேன்
யார் தேவதையா...?
ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....!
அனைத்தையும் அடித்துவிடும்
அழகான ஓர் முகம்...
ஆனாலும் கண்களிலே கண்ணீர்...
கலைந்த கூந்தல்....
மாற்றான் கைபட்டு
கசங்கிய மேலாடை...
மான மறைப்புகளில்
ஆங்காங்கே இரத்தத் துளி.....
கலைந்த கூந்தலையும்
அலங்கரித்த கார்த்திகைப் பூ

என் கண்முன்னே கதறுகிறாள்
ஏன் என்னை கைவிட்டாய்..?
நான் கேட்டென்...?
எப்போ உனை கைவிட்டேன்...?
நான் உன்னைப் பார்த்ததில்லை...!

அட பாதகனே..
எனை பிரிய மனமின்றி
அன்று ஏங்கி அழுது நின்றாய்...
எனை விட்டு பிரிய முதல்
என் காலையே பிடித்து நின்றாய்.....
நீ விட்ட கண்ணீர் துளி
என் மார்பை நனைத்துவிட
என் மார்பு துடித்து நின்று
உன் அன்பை பெற்றதுவே...!
அன்று தான் சொன்னேனே
உன் கடமை வெளியிலே
உனக்காய் காத்திருக்கு
காலம் வரும் போது
நான் வருவேன்; உன்னிடம்
அதுவரை காத்திருப்பாய்...!
அத்தனையும் மறந்தாயா...?
பாவி அடியோடு எனை மறந்தாயா..?

அன்று நான் உன்னை
கவர்ந்திருந்த கட்டழகி....
இன்று நான் உனக்கு
கசக்கப்பட்டு ரோஜாவா...?
சரி என் பெயர்கூட மறந்ததா...?
நான் தான் தமிழீழம்...
எதிரியின் கைபட்டு
உடைந்துவிட்ட உன் ஈழம்...!
சரி நான் வருகிறேன்
என்னை காதலிக்க மறக்காதே...!
காதலிக்க மறந்தாலும்
காக்கவேனும் மறக்காதே...!

ஐயோ என் செல்வமே... நீயா..இது...?
அவளைத் தடுக்க என் கால்கள்
அவசரமாய் அடிவைக்க
முடியவில்லை முயன்றும் முடியவில்லை
அவள் பெயர்சொல்லிக் கதறுகிறேன்...
உடம்பெல்லாம் வியர்த்து
நெஞ்சு பதைபதைக்க
முழிக்கிறென் ..! ஆம் விழிக்கிறேன்
கனவு கலைந்து
கட்டிலில் இருந்து....
ஆம்..! என் கடமை புரிகிறது
என் கால்கலும் செல்கிறது..
ஆம் ..! தவறாமல் என் கடமைக்காய்
என் கால்கள் என் நாளும் செல்கிறது....

இளங்கவி

2 comments:

  1. ungkal kavithaikal azaku ilankavi... manasai kollura mathiri irukku... nadbudan suji

    ReplyDelete
  2. நன்றி சுஜி உங்கள் பாராட்டுக்கு, எல்லோரும் பாராட்டும் போது இன்னமும் எழுத வேண்டும் போல் இருக்கிறது

    ReplyDelete